பல்வேறுபட்ட அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைக் குழுக்களை நாம் உருவாக்கி வருகின்றோம். கவனக்குழுக் கலந்துரையாடல்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் திரட்டுதல், அனைவரையும் உள்ளடக்குவதை உறுதிப்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்குதல், குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மற்றும் திட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பை மதிப்பீடு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
இந்தச் செயற்பாட்டுத் தொகுப்பு வன்முறையால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளை ஆராய்கிறது. வன்முறையினால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக ரீதியான பாதிப்புகளைப் புரிந்துகொள்வதற்காக, ஏற்கனவே உள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல், கணக்கெடுப்புகளை நடத்துதல் மற்றும் போதிய சேவைகள் கிடைக்காத சமூகங்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
வன்முறை பல்வேறு பரந்த பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. செயற்பாட்டுத் தொகுப்பு 3 (WP3), இந்தச் செலவுகளை மதிப்பிடுவதற்காகத் தரவுகள், முறைமையான ஆய்வுமதிப்புரைகள் மற்றும் கவனக்குழுக் கலந்துரையாடல்களைப் பயன்படுத்துகிறது. மேலும், வன்முறையைத் தடுப்பதற்கும் அதனை எதிர்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்காததால் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் மீது ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கிறது.
வன்முறையைத் தடுப்பதற்கான பயனுள்ள உத்திகளைக் கண்டறிவதே எமது நோக்கமாகும். இதற்காக, வழிகாட்டிக் கருவித்தொகுப்புகளை உருவாக்குதல், கலாசார உணர்வுகளைக் கருத்திற்கொண்ட மதிப்பீட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குதல், சிறந்த நடைமுறைகளுடன் ஒப்பிட்டு கொள்கைகளை மதிப்பீடு செய்தல், அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதற்கும் தலையீட்டு நடவடிக்கைகளை முன்னோட்டமாகச் செயற்படுத்திப் பரிசோதித்தல் ஆகியவற்றை மேற்கொள்கின்றோம்.
செயற்பாட்டுத் தொகுப்பு 5 (WP5), நிலையான ஆராய்ச்சி ஆற்றலை வலுப்படுத்துவதுடன், சமத்துவமான உலகளாவிய அறிவுப் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. எளிதில் அணுகக்கூடிய பயிற்சிகள், வழிகாட்டல் மற்றும் திறந்த அணுகல் வளங்களை வழங்குவதன் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் (LMIC) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கும் ஆதரவளிக்கிறது. அதேவேளை, நீண்டகால உலகளாவிய ஆராய்ச்சி வலையமைப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறது.