டிஜிட்டல் தொற்றுநோயியல் மையம், மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் தொற்றுநோயியல் மையத்தில் (CoDE), பங்கேற்பு அடிப்படையிலான செயற்பாட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் ஊடாக நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் (WASPAR) திட்டத்தின் கீழ் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்களிடமிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களைக் கோருகிறது.
விவசாயம், வேதியியல், பொறியியல், புவியியல், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற இயற்கை அறிவியல் துறைகளில் அல்லது சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகளில் இளமாணிப் பட்டம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனத்திலிருந்து அதற்குச் சமமான தகைமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.
நீர் தொடர்பான ஆராய்ச்சி, தொடர்புடைய ஆராய்ச்சித் துறை, பங்கேற்பு அடிப்படையிலான அல்லது சமூகத்தை மையமாகக் கொண்ட சமூக ஆராய்ச்சி அல்லது அதற்குச் சமமான துறைகளில், தகைமை பெற்றதன் பின்னர் குறைந்தது 02 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுத்து மற்றும் பேச்சுத் திறனில் உயர்ந்த தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பாக Microsoft Word, Excel, மின்னஞ்சல் மற்றும் ஏனைய தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதில் உயர்ந்த திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
பண்புசார் ஆராய்ச்சி முறைகள், புள்ளிவிபரவியல், தரவுத்தள முகாமைத்துவம் ஆகியவற்றைக் கையாளும் திறனும், பங்கேற்பு அடிப்படையிலான செயற்பாட்டு ஆராய்ச்சி நடைமுறைகள் தொடர்பான அறிவும் பெற்றிருத்தல் வேண்டும்.
பங்கேற்பு அடிப்படையிலான செயற்பாட்டு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில், பொதுத்துறை, தொழிற்துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களை ஈடுபடுத்துதல் உட்பட பல்வேறு கள ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஆராய்ச்சிக் குழுவிற்கு உதவுதல்.
சமூகக் குழுக்களுடனும் அரசாங்க மற்றும் தொழில்சார் வலையமைப்புகளுடனும் இணைந்து செயலமர்வுகளைத் திட்டமிட்டு நடத்துதல் மற்றும் பொருத்தமான ஏனைய ஆராய்ச்சி முறைகளை நடைமுறைப்படுத்துதல்.
அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகளைச் சேகரித்தல், பதிவேற்றுதல், அவற்றின் டிஜிட்டல் பதிவுகளைப் பராமரித்தல், அத்தரவுகளின் பகுப்பாய்விலும் ஆய்வு வெளியீடுகளைத் தயாரிப்பதிலும் பங்கேற்றல்.
கலந்துரையாடல் மன்றம் (Dialogue Forum) மற்றும் இளம் நீர்வளத் தொழில்சார் வல்லுநர்கள் (Young Water Professionals) தளங்களில் செயற்படும் பங்கேற்பாளர்களுடன் தொடர்பாடல் மற்றும் வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு உதவுதல்.
ஆராய்ச்சி முடிவுகளைப் பரப்புவதற்கு உதவுதல்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழுத் தலைவர்களுடன் இணைந்து ஆராய்ச்சியின் முன்னேற்றம் தொடர்பான வழக்கமான அறிக்கைகளைத் தயாரித்துப் பராமரித்தல்.
திட்டம் தொடர்பான அனைத்துச் செலவுகளுக்கும் உரிய நிதிப் பதிவுகளை முறையாகப் பராமரித்தல்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது குழுத் தலைவர்களால் ஒப்படைக்கப்படும் ஏனைய தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றுதல்.
மாதாந்தச் சம்பளமாக ரூ. 60,800/- வழங்கப்படும்.
முழுநேர ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான தகைமைகளுக்கு இணையான தகைமைகள் அவசியமாகும்.
முழுநேர ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான கடமைகளுக்கும் பொறுப்புகளுக்கும் இணையானவையாகும்.
பகுதிநேரப் பணியாளர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று (03) நாட்கள், காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பணியாற்ற வேண்டும். இதன்படி, மாதத்திற்கு குறைந்தது பன்னிரண்டு (12) வேலை நாட்கள் பணியாற்றுவது அவசியமாகும்.
முதன்மை ஆய்வாளரின் (Principal Investigator) ஒப்புதலுக்கு உட்பட்டு, வார இறுதி நாட்கள் உட்பட தமக்கு விருப்பமான வேலை நாட்களைத் தெரிவுசெய்யலாம்.
மாதாந்தச் சம்பளமாக ரூ. 30,500/- வழங்கப்படும்.
தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், பொறியியல் அல்லது தொடர்புடைய இயற்கை அறிவியல் அல்லது சமூக அறிவியல் துறைகளில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனத்திலிருந்து இளமாணிப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சி அல்லது அபிவிருத்தித் திட்டங்களில் திட்ட ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி முகாமைத்துவம் அல்லது தரவு / தகவல் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் தகைமை பெற்றதன் பின்னர் குறைந்தது 01 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பின்வரும் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருத்தல் வேண்டும்:
Microsoft Office தொகுப்பு: Word, Excel, PowerPoint மற்றும் Access.
தரவுத்தள முகாமைத்துவ முறைமைகள்.
இணையத்தள உருவாக்கம் மற்றும் உள்ளடக்கத்தைப் புதுப்பித்தல்: WordPress, HTML அல்லது உள்ளடக்க முகாமைத்துவத் தளங்கள் (CMS) போன்றவை.
டிஜிட்டல் தொடர்பாடல் கருவிகள்: மின்னஞ்சல், இணையவழிக் கூட்டத் தளங்கள் மற்றும் Google Drive அல்லது MS Teams போன்ற கூட்டுப்பணிக் கருவிகள்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுத்து மற்றும் பேச்சுத் திறனில் உயர்ந்த தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ஆராய்ச்சி ஆவணப்படுத்தல், தரவுக் காட்சிப்படுத்தல் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருப்பது மேலதிக தகைமையாகக் கருதப்படும்.
WASPAR திட்டத்தின் அனைத்து ஆராய்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து முகாமைத்துவம் செய்தல்.
திட்டத்தின் இணையத்தளத்தையும் டிஜிட்டல் தரவுத்தளத்தையும் உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்; திட்டம் தொடர்பான தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படுவதையும் பகிரப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.
திட்டத்தின் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகளைச் சேகரித்தல், சேமித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தல்; தரவுகளின் துல்லியத்தையும் இரகசியத்தன்மையையும் உறுதிப்படுத்துதல்.
அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கல்விசார் பங்காளிகள் மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கிடையிலான தொடர்பாடலையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்துதல்.
திட்டக் குழுவுடன் இணைந்து திட்ட முன்னேற்ற அறிக்கைகள், கூட்டச் சுருக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களைத் தயாரித்துச் சமர்ப்பித்தல்.
கருத்தரங்குகள், செயலமர்வுகள், பங்குதாரர் கூட்டங்கள் மற்றும் களப் பயணங்கள் போன்ற திட்ட நிகழ்வுகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்தல்.
அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் ஆதரவளித்தல்.
திட்ட நடவடிக்கைகள் தொடர்பான நிதி மற்றும் நிர்வாகப் பதிவுகளை முறையாகப் பராமரித்தல்.
திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப, முதன்மை ஆய்வாளர் அல்லது குழுத் தலைவர்களால் ஒப்படைக்கப்படும் ஏனைய கடமைகளையும் நிறைவேற்றுதல்.
மாதாந்தச் சம்பளமாக ரூ. 52,200/- வழங்கப்படும்.
தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவர். மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கான முழுநேர மற்றும் பகுதிநேர நியமனங்கள் ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும். திட்டத்தின் தேவைகள் மற்றும் பணியாளரின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், முதன்மை ஆய்வாளரின் விருப்பத்திற்கிணங்க நியமனக் காலம் நீடிக்கப்படலாம்.
விண்ணப்பதாரர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருத்தல் வேண்டும்.
இலங்கையின் வட மாகாணத்திற்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் களப்பணிகளில் ஈடுபடுவதற்கான திறனும் விருப்பமும் விண்ணப்பதாரர்களிடம் இருக்க வேண்டும்.
நியமனத்தின் போது விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் (EPF) ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கும் (ETF) பங்களிப்புச் செய்ய வேண்டும். ஊழியர் தனது மாதாந்தச் சம்பளத்தில் 8% ஐ EPF இற்குப் பங்களிக்க வேண்டும். அதேவேளை, பணியமர்த்துநர் EPF இற்கு 12% மற்றும் ETF இற்கு 3% பங்களிப்புச் செய்வார்.
திருப்பிச் செலுத்தப்படாத ரூ. 100.00 விண்ணப்பக் கட்டணத்தை மக்கள் வங்கியில் (People’s Bank) பின்வரும் கணக்கிற்கு வைப்புச் செய்ய வேண்டும்:
கணக்கு இலக்கம்: 970000090000387
கணக்கின் பெயர்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிதியாளர் (Bursar), University of Jaffna
வங்கியில் பணம் வைப்புச் செய்ததற்கான பற்றுச்சீட்டின் பிரதியை விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும்.
கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தகைமைகள், அனுபவங்களை உறுதிப்படுத்தும் ஏனைய தொடர்புடைய சான்றிதழ்களின் பிரதிகளுடன் விண்ணப்பங்களைப் பதிவுத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
பிரதி பதிவாளர்,
மருத்துவ பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ஆடியபாதம் வீதி,
கொக்குவில், யாழ்ப்பாணம்.
மேலும், அனைத்து ஆவணங்களினதும் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை fomvacancy@univ.jfn.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் 2026 மார்ச் 27ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.
பல்கலைக்கழகக் கட்டமைப்பு, அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை உரிய நிறுவனங்களின் தலைவர்கள் ஊடாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான விண்ணப்பங்களையும் தனித்தனி வங்கிப் பற்றுச்சீட்டுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வாசிக்க முடியாத விண்ணப்பங்கள், முழுமையற்ற விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப முடிவுத் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலும் இன்றி நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், கடித உறையின் மேல் இடது மூலையில் குறிப்பிடப்பட வேண்டும்.
நேர்முகத் தேர்வுக்கு குறுகிய பட்டியலில் தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அழைக்கப்படுவர்.