குடும்ப சுகாதாரச் சான்றிதழ் கற்கைநெறியின் அங்குரார்ப்பண விழா

குடும்ப சுகாதாரச் சான்றிதழ் கற்கைநெறியின் அங்குரார்ப்பண விழா, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்திலுள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, மருத்துவ பீடத்தின் டிஜிட்டல் தொற்றுநோயியல் மையம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி மையம் ஆகியவற்றின் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் S. சிறிசற்குணராஜா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் R. சுரேந்திரகுமரன், திறந்த மற்றும் தொலைக்கல்வி மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் J. ரொபின்சன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருத்துவ அதிகாரியும் திட்டமிடல் பொறுப்பாளருமான டாக்டர் லலானி பதிரண உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினர்.

டிஜிட்டல் தொற்றுநோயியல் மையத்தின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் செயற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் S. குமரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். குழந்தை மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் M. G. சத்தியதாஸ் மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் S. ரகுராமன் ஆகியோர் நிகழ்த்திய உரைகளில், குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் ஆகிய துறைகளில் சமூக சுகாதாரப் பணியாளர்களின் முக்கிய பங்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இச்சான்றிதழ் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பில் கனடாவில் உள்ள யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் வெளிநாட்டு பழைய மாணவர்களின் பங்களிப்பு குறித்தும் டாக்டர் ரகுராமன் குறிப்பிட்டார்.

நீண்டகால நோய்நிலைகளால் எதிர்கொள்ளப்படும் சவால்களை எடுத்துரைக்கும் நாடக நிகழ்வொன்றும் மேடையேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் R. சுரேந்திரகுமரன், பேராசிரியர் J. ரொபின்சன் மற்றும் பிரதம விருந்தினரான பேராசிரியர் S. சிறிசற்குணராஜா ஆகியோர் உரையாற்றினர்.

இவ்வங்குரார்ப்பண விழாவானது, குடும்ப சுகாதாரத் துறையில் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கான இச்சான்றிதழ் கற்கைநெறியின் ஆரம்பத்தைக் குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.